சென்னை – கோவை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் அதிரடி மாற்றம்.. 3 இடங்களில் மட்டும் நிறுத்தம் : முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2023, 7:49 pm
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 12 -வது வந்தே பாரத் ரயிலாக சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த புதிய சேவையை நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இதுதான் ஆகும்.
கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்த ரயில் வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் கோவை சென்றடையும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது.
தற்போது வெளியாகியிருக்கும் அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகள் விமான பயணங்களுக்கு நிகரான சொகுசு வசதிகளை உணர முடியும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.