மக்களை ஏமாற்றி அரசியல் லாபம்: இது தற்போதைய திட்டம் அல்ல: திமுக வை விளாசும் அதிமுக எம்எல்ஏ….!!

Author: Sudha
12 August 2024, 6:14 pm
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசு அஇஅதிமுக அரசு நாகர்கோவில் நகர மக்களின் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது நகர மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி எப்பொழுதும் கிடைகின்ற வகையில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கினார்கள்.  

இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தும் அன்றைய முதலமைச்சர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களாலும், புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களாலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திட்டத்தின் வாயிலாக 2032-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி 3.20 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 41.12 மில்லியன் லிட்டர் மற்றும் எதிர்கால (2047) மக்கள் தொகையின் படி 3.90 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 52.04 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நாகர்கோவில் கிராம குடிநீர் திட்டம் தெரிவித்திருந்தது. 

ஆனால் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் இத்திட்டத்தின் மூலம் 71 ஆயிரத்து 965 வீடுகள் மற்றும் 3.20 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2032-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி தான் 3.20 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும், எதிர்காலத்தில் 2047-ம் ஆண்டில் தான் 3.90 இலட்சம் மக்கள் பயன் பெறுவதாக அதிகாரபூர்வமாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்து இருக்கிறது. விவரங்கள் இவ்வாறு இருக்க மக்களுக்கு தெரிவிப்பதில் ஏன் இந்த குளறுபடி. உண்மைக்கு மாறாக தகவல்கள் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறது. மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் அடைய முயல்கிறீர்களா?

மேலும் 06-10-2023 அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்ட பல்வேறு துறைகளின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தில் 39-வது பக்கத்தில் இக்குடிநீர் திட்டத்தின் மூலம் 85 ஆயிரம் வீடுகளுக்கு HSC இணைப்புகளில் 53 ஆயிரத்து 769 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


இதில் எது உண்மை தெளிவு படுத்துங்கள். இன்றைய நிலையில் உண்மையாக எத்தனை மக்கள் பயன் பெறுகிறார்கள். எத்தனை வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியுங்கள். அதைவிட்டு மக்களை குழப்பும் முயற்சிகளை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு பெருஞ்சாணி கிராமத்தின் அருகே புத்தன் அணையின் மேல்புறம் உள்ள பரளியாற்றில் 8 மீட்டர் விட்டம் உள்ள நீர் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மேற்பரப்பு நீரை 130 HP மின் இயந்திரம் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள 41.12 MLD புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 12.10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியிலும், இதைப்போன்று 6 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு மூன்று பிரதான உந்து குழாய்கள் மூலம் 31.01 கிலோ மீட்டருக்கு உந்தப்பட்டு, 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மாநகராட்சியின் 27 மண்டலங்களுக்கு 475.66 கிலோ மீட்டர் பகிர்மான குழாய்கள் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியிலும், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான ஆட்சியிலும், நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களும், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களும் தந்த நாகர்கோவில் மாநகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.

  • expecting good bad ugly movie collection will overtake jailer movie collection ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?