ஒரு மாத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த போதை பெண்.. தலைக்கேறிய நிலையில் பேருந்து நிலையத்தில் திரிந்த அவலம்..!!

Author: Babu Lakshmanan
16 September 2022, 2:24 pm

ஒரு மாத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்து, பேருந்து நிலையத்தில் தலைக்கேறிய மது போதையுடன் திரிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு, அந்த குழந்தைக்கு மது ஊற்றி அந்தப் பெண்ணும் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு பகுதிக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்த போது, குழந்தை பிறந்து 13 நாள் ஆகிறது. கரூரில் பிறந்தது என முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்து காவலர் உடனடியாக பெண் காவலருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த பெண் காவலர், அந்தப் பெண்ணின் கையில் இருந்து குழந்தையை மீட்ட காவலர், குழந்தையை பார்த்தபோது குழந்தை மயக்கத்தில் இருந்ததை அறிந்தார்.

மேலும் அந்தப் போதைக்கார பெண்மணி எழுந்திரிக்கும் பொழுது, அவர் மடியில் இருந்து இரண்டு மது பாட்டில்கள் கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரிக்க முயற்சித்த போது அதீத மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அந்த குழந்தை சுமார் இரண்டு கிலோ ஆறு நூறு கிராம் எடை இருந்தது. அது ஆண் குழந்தை என்றும், பிறந்து ஒரு மாதத்திற்குள் இருக்கும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

அந்தப் போதைக்கார பெண்மணி, போதையில் அது என் குழந்தை என முனுமுனுத்தபடி, எழுந்து வரும்போது மது போதையால் நடக்க முடியாமல் சாலையில் விழுந்து தன்நிலை மறந்து உருண்டு புரண்டு கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்தப் பெண்மணி போதையில் குழந்தையை கையில் வைத்திருந்த போது, குழந்தையின் கைகளை திருகி வளைத்து கொடுமை செய்ததாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் தற்போது குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்தக் குழந்தை யார் குழந்தை என்றும், ஒருவேளை அந்த குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!