சென்னை : வியாசர்பாடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் மூர்த்திங்கர் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கோகுல கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டை விற்று தரும்படி அண்ணன் கூறியதால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து வினோத் குமாரின் அண்ணன் கோகுலிடம் வினோத்குமார் பணம் திருடி விட்டதாகவும், இது சம்பந்தமாக இருவருக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு கோகுல் மற்றும் வினோத்குமார் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு போதையில் இருந்த வினோத்தை கோகுல் பலமாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் இது தெரியாமல் கோகுல் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுக்கை அறையில் சென்று தூங்கியுள்ளார். மேலும் காலையில் எழுந்து பார்த்த போது வினோத் குமார் சுய நினைவில்லாமல் கிடந்ததால் கோகுல் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரியும் மது வாங்கி அருந்தி விட்டு இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்து வீட்டிலிருந்த ரத்த காயங்கள் மற்றும் கோகுல் அணிந்திருந்த உடைகளை மாற்றி விட்டு ஈஸ்வரி அருகில் உள்ளவர்களிடம் வினோத்தை யாரோ அடித்து விட்டார்கள் அதனால் அவன் வீட்டிற்கு வந்து இறந்து விட்டான் என்று பொய்யாக அழுது புலம்பி இருந்திருக்கிறார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முதல் கட்ட விசாரணையில் அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் தான் வினோத் இறந்து விட்டதாகவும், ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் மூத்த மகன் டெல்லி கணேஷ் என்பவர் படிக்கட்டில் விழுந்து இறந்து விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.