ஒரு ம•••• பு•••• முடியாது… குடிபோதையில் போலீசாரிடம் சிக்கிய கணவன்.. காவலரை தாக்கி வீரவசனம் பேசிய மனைவி… அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan18 April 2023, 3:54 pm
வாகன சோதனையின் போது மது அருந்திவிட்டு போலீசாரிடம் மாட்டிக் கொண்ட கணவனை காப்பாற்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய மனைவி உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வாகன தணிக்கை காவல்நிலைய உதவி ஆய்வாளர் யோஜிதாஸ் தலைமையிலான பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் பைக்கில் வந்த இருவர், போலீசாரைப் பார்த்ததும், வண்டியை விட்டு இறங்கி தள்ளிக் கொண்டு வந்தனர்.
இதனை கவனித்த போலீசார் அவர்களை மடக்கி சோதனை செய்தனர். இதில், இருவரும் மதுக்குடித்து வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ப்ரீத் அனலைசர் கருவி கொண்டு சோதனை செய்ய முற்பட்டபோது, வாகனத்தில் வந்த நபர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். மேலும், அதில் ஒருவர் தனது மனைவிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனை கேட்டு சம்பவ இடத்திற்கு உடனே வந்த அந்தப் பெண், எதற்காக தனது கணவரை நிறுத்தி வைத்துள்ளீர்கள்..? எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், எம்.பி. யை கூட்டிட்டு வரவா? எம்.எல்.ஏ.வை கூட்டிட்டு வரவா? பைக் ஓட்டினு வந்தாதான் ஃபைன் போடணும், தள்ளினு வந்தா போடக்கூடாது என வீரவசனம் பேசியுள்ளார். மேலும், தொப்பியாலும், கையாலும் உதவி ஆய்வாளர் யோகிதாஸ், காவலர் வெள்ளத்துரை ஆகியோரை தாக்கியுள்ளார்.
அதோடு, போலீசார் அனைவரும் ஃப்ராடு எனக் கூறி ஆவேசமாக நடந்து கொண்டார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்து முகவரி வாங்கிகொண்டு மூவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தது சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்த சத்யராஜ்(32) என்பவதும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது அவரது நண்பர் வினோத் குமார்(32) என்பதும் தெரியவந்த்து. மேலும் போலீசாருடன் வீரவசனமாக ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தாக்கியது சத்யராஜின் மனைவி அக்ஷயா(31) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவலர் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில், அக்ஷயா, அவரது கணவர் சத்யராஜ் மற்றும் அவர்களின் நண்பர் வினோத் குமார் ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.