மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து படுத்து தூங்கிய போதை ஆசாமி; பதறிப்போன மூதாட்டி… வீதியில் தூக்கி வீசிய பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan20 May 2023, 3:54 pm
அதியமான் கோட்டை அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் மது போதையில் திறந்திருந்த வீட்டில் நேரடியாக உள்ளே சென்று படுத்து தூங்கிய மது போதை ஆசாமியால் பரபரப்ப ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையால் தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளும் தொடர்ந்து வருகின்றன.
இதனால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தினம்தோறும் மது பிரியர்களால் அப்பகுதியில் பெண்கள் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக அப்போது கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், இன்று மதுபான கடையில் மது அருந்திய நபர் ஒருவர் முழு மதுபோதையில் அப்பகுதியில் திறந்திருந்த வீட்டில் நேரடியாக நுழைந்து படுத்து தூங்கியுள்ளார். அப்பொழுது அந்த வீட்டில் குடியிருந்த மூதாட்டி வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் வந்து போதையில் இருந்த நபரை வீதியில் தூக்கி வீசினர்.
மேலும் தினம்தோறும் இது போன்ற மது போதை ஆசாமிகளால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இப்பகுதியில் நிலவுகிறது.
காவல்துறைக்கு தெரிவித்தாலும் அவர்கள் எங்கள் மீது வழக்கு போடுவதிலேயே தீவிரம் காட்டுகின்றனர் மாறாக எங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்வதில்லை. எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.