‘குடிச்சுட்டு வந்தா வண்டிய புடிப்பியா’… சாலையில் கட்டைகளை வீசி நாற்காலி அமர்ந்த போதை ஆசாமி.. வைரலாகும் அலப்பறை வீடியோ!!
Author: Babu Lakshmanan21 June 2023, 2:01 pm
கடலூர் ; சாலையின் நடுவில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்பொழுது, அந்த வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஜெயக்குமார் வாகனத்தை நிறுத்தி விசாரித்ததில், அதிக மது போதையில் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரது இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து, காலையில் காவல் நிலையம் வந்து இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி அனுப்பி உள்ளனர். அங்கிருந்து சென்ற ஜெயக்குமார் திட்டக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மரம் அறுக்கும் பட்டறையில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து திட்டக்குடியில் இருந்து தொழுதூர் செல்லும் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு போட்டுவிட்டு, அங்கிருந்த நாற்காலியை எடுத்து சாலையின் நடுவில் போட்டு அமர்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்டார்.
இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீசார் ஜெயக்குமாரை கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காலையில் காவல் நிலையம் வரவழைத்து, அவர் மீது போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.