மதுபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற இளைஞர்… கடவுளாக வந்து காப்பாற்றிய சக காவலர் ; மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan21 June 2023, 4:25 pm
மதுரையில் மது போதையில் காவல்துறையினரை கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் நுழைவாயிலிலேயே அரசு மதுபானக்கடை மற்றும் தனியார் மதுபானக்கடைகள் அமைந்துள்ளது. இந்த பேருந்துநிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளும் வந்து செல்வதால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது, பேருந்து நிலைய நுழைவாயில் உள்ள மதுபானகடைகளால் அண்ணா பேருந்து நிலையம் திறந்தவெளி மதுபானகூடமாக மாறியுள்ளது. இதனால் மதுபோதை ஆசாமிகள் பெண்கள் முன்பாக ஆபாசமாக பேசுவது, அந்த பகுதியிலயே ஆடைகளின்றி சுற்றி திரிவது, பணம் கேட்டு மிரட்டுவது என அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதுரை சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் மது போதையில் ஆபாசமாக பேசி கூச்சலிட்டு பயணிகளை மிரட்டியபடி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த மதிச்சியம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகர்சாமி மதுபோதை இளைஞரை பிடித்து அப்புறப்படுத்த முயன்றார்.
அப்போது, எதிர்பாராத நேரத்தில் SIஐ கீழே தள்ளிவிட்ட தினேஷ், அவரது காலிலும் மார்பிலும் மிதித்து அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்து ஓடிவந்த மற்றொரு உதவி ஆய்வாளர் வைரவசாமி மீதும் போதை இளைஞர் தினேஷ் பீர் பாட்டிலை வீசி எறிந்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் பீர் பாட்டில் உடைந்து துண்டு வைரவசாமி மீது பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர், மதுபோதை இளைஞர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மற்ற காவல்துறையினர் தினேஷை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர், தினேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் காவல்துறையினரை தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞரை தடுக்க வந்த காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், நாள்தோறும் பயணிகள் கடுமையான அச்சத்திற்கு ஆளாக கூடிய நிலை ஏற்பட்டு வருவதால், பேருந்து நிலையத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், மதுபான கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.