சைடிஷ் வருவதற்குள் முழு பாட்டிலையும் காலி செய்த 60 வயது நண்பன்… ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 1:37 pm

மதுபானம் பங்கிடுவதில் தனக்கு உரிய பங்கு வராததால் ஆத்திரமுற்ற 18 வயது இளைஞர் ஒருவர், தனது கூட்டாளியான 60 வயது‌ முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா மற்றும் வணிக ஸ்தலங்களுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம். சமீபகாலமாக மது, கஞ்சா, அபின், போதை பாக்குகள் போன்ற போதை வஸ்துகளின் புகலிடமாக மாறி வருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் யாசகம் பெற்று பொழைப்பு நடத்தி வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரும், செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா என்ற 18 வாலிபரும் கூட்டாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

காமாட்சி அம்மன் கோவில், மேற்கு மாடவீதி அருகில் உள்ள சந்தில், இருவரும் சேர்ந்து, மது அருந்தியுள்ளனர். போதை ஏறாததால் மற்றொரு குவார்ட்டர் பாட்டில் வாங்க இருவரும் பாதி பாதி பணத்தை போட்டு மீண்டும் ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினர். முதியவர் மதுபாட்டில் வாங்கி வந்து, ‘சைடிஷ்’ வாங்க சென்ற வாலிபருக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். உதயா வர தாமதமானதால், முதியவர் முழு பாட்டில் மதுவையும் குடித்துள்ளார்.

அங்கு வந்த உதயா , மது முழுவதும் குடித்துவிட்ட முதியவர் மீது கோபம் ஏற்பட்டது. மீண்டும் கடைக்கு சென்ற உதயா, இரண்டு ‘பிளேடுகள்’ வாங்கி வந்து, முதியவரின் கழுத்தை புது பிளேடால் அறுத்துள்ளார். ரத்தம் குபு குபு வென பீரிட்டு வெளியேறியதில் மயங்கி விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். முதியவரை கொலை செய்துவிட்டு உதயா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் வெற்றிசெல்வன் மற்றும் காவல்துறையினர், சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், கைகள், ஆடைகளில் ரத்த கறையுடன் திரிந்த உதயாவை, பொதுமக்கள் அளித்த தகவலின்படி போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இறந்தவர் யார், சொந்த ஊர், பெயர் குறித்த விபரங்களை, போலீசார் விசாரித்து வருகின்றனர். சரிசமமாக பணத்தைப் போட்டு வாங்கிய மதுவை ஒருவரே குடித்து விட்டதால், ஆத்திரமுற்ற 18 வயது இளைஞர் முதியவரின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்து விட்டு சிறைக்கு சென்ற சம்பவம் காஞ்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!