காதலை கைவிட்ட மாணவி.. குடிபோதையில் நண்பர்களுடன் வீட்டின் முன்பு காதலன் அராஜகம்.. பாட்டில்களை வீசி அச்சுறுத்தல்..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan11 May 2022, 12:12 pm
சிவகங்கை : உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவி வீட்டில் மது பாட்டில்களை வீசி எறிந்து போதை ஆசாமிகள் அட்டகாசம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அதிகரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து – அம்பிகா தம்பதியின் மகளான ரேகா, உக்ரைன் நாட்டில் மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார். உக்ரைனில் நடந்த போர் காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பியுள்ளார்.
மாணவியின் அண்ணனுடைய நண்பரான குமார குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் அவ்வப்போது ரேகாவின் உடைய வீட்டுக்கு வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் லோகேஷின் தவறான பழக்கம் குறித்து அறிந்த மாணவி, அவரிடம் இருந்து விலகிய நிலையில்தான், உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிப்பதற்காக சென்றுள்ளார்.
உக்ரைன் நாட்டிற்கு சென்ற பிறகும் அவருக்கு போன் செய்து லவ் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உக்ரைன் போர் காரணமாக மாணவி ரேகா சொந்த ஊர் திரும்பியுள்ளார். மருத்துவ மாணவி ரேகா சொந்த ஊர் திரும்பியதில் இருந்து, தொடர்ந்து லோகேஷ் லவ் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறிய லோகேஷ், இரவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு போதையில் கையில் பீர் பாட்டிலுடன் மாணவியின் வீட்டிற்கு வந்த அவர், பாட்டிலை வீட்டிற்குள் தூக்கி எறிந்து அராஜகம் செய்துள்ளார்.
மேலும் மாணவி குறித்தும், மாணவியின் பெற்றோர் குறித்தும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
புகாரை விசாரிக்க காவல்துறையினர் லோகேஷ் வீட்டிற்கு சென்றதால் மேலும் ஆத்திரமடைந்த லோகேஷ் மறுபடியும் மாணவியின் வீட்டில் கற்களை எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் . இதுகுறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 நபர்களையும் தேடி வருகின்றனர்.