குடிபோதையில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமிகள் ; பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்… பழனி கோவில் பக்தர்கள் அவதி..!!
Author: Babu Lakshmanan4 April 2023, 1:32 pm
பழனி அருகே பாலசமுத்திரத்திற்கு சென்ற மினி பேருந்தை மதுபோதையில் சென்ற ஆசாமிகள் ஓட்டுநர் ,நடத்துனரை கல்லால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு செல்ல 7க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும், ஒரு அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு பழனி பேருந்து நிலையத்திலிருந்து பால சமுத்திரம் நோக்கி சென்ற மினி பேருந்தை போதையில் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது, பெண் ஆய்வாளர் தடுத்து அந்த குடிபோதை ஆசாமியை கீழே இறக்கி உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த குடிபோதை ஆசாமி, ராமநாதன் நகர் அருகில் மினி பேருந்து சென்று கொண்டிருந்தபோது மூன்று நபர்களுடன் வந்து பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரையும், நடத்துனரையும் கல்லால் தாக்கியும், பேருந்துவின் கண்ணாடியை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் திருஆவின்குடி செல்லும் பக்தர்களும், பால சமுத்திரம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் தங்களுக்கு ஏதும் பணி பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஓட்டுனர்களும், நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.