மதுபோதையில் தகராறு… சிமெண்ட் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!
Author: Babu Lakshmanan23 November 2022, 7:37 pm
ஒட்டன்சத்திரத்தில் இரு இளைஞர்களிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் கல்லால் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த முனியப்பன் என்பருக்கும், தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த சபரிநாத் என்பருக்கும் மதுபோதையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முனியப்பன் மார்க்கெட் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, கையில் சிமெண்ட் கல்லோடு பின்தொடர்ந்த சபரிநாத் முனியப்பனை மடக்கி தகராறில் ஈடுபட்டபோது, இருவரும் கீழே விழுந்தனர். இதில் சபரிநாத் கையில் இருந்த சிமெண்ட் கல் கீழே விழுந்து விட்டது.
உடனே அந்த கல்லை எடுத்த முனியப்பன் சபரிநாத்தின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினான். பின்னர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சபரிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கல்லால் தாக்கி விட்டு தப்பியோடிய முனியப்பன் காவல் நிலையம் சென்று தன்னை சபரிநாத் தாக்கி விட்டதாக புகார் கொடுத்துள்ளான். இந்நிலையில் முனியப்பனை போலிசார் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலிசாரிடமிருந்து முனியப்பன் தப்பியோடினான். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தப்பியோடிய முனியப்பனை பிடித்த போலிசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முனியப்பன், சபரிநாத்தை சிமெண்ட் கல்லால் தாக்கும் பதபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.