அமைச்சருடன் மேயர் மோதலால் வார்டுகளில் அடிப்படை வசதி பாதிப்பு : திமுக பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 7:56 pm
அமைச்சருடன் மேயர் மோதலால் வார்டுகளில் அடிப்படை வசதி பாதிப்பு : திமுக பெண் கவுன்சிலர் குமுறல்!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மேயர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திடீரென திமுக பெண் கவுன்சிலர் மோனிகா விமல் என்பவர் தனது வார்டை மாநகராட்சி மேயர்மகேஷ் புறக்கணிக்கிறார் என கூறி வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறார் என கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண் கவுன்சிலர் மோனிகா விமல் கூறுகையில்”தனது 19 வது வார்டுக்கு உட்பட்ட மேல ஆசாரிபள்ளம் பகுதியில் பல வருடங்களாக குடிதண்ணீர் பிரச்சனை நிலவிவருவது சம்பந்தமாக பல மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மாநகராட்சி, மேயருக்கும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இது குறித்து மேயரிடம் நேரில் சென்று தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதாகவும், திமுக கவுன்சிலராக இருந்தும் வெற்றி பெற்று தனது வார்டு மக்களுக்கு குறைகளை செய்து கொடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மேயர் மகேஷ் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சர் மனோ தங்கராஜை நாடினேன், அமைச்சரை நாடியதற்காக தனது வார்டை மேயர் மகேஷ் புறக்கணிப்பதாகவும்,மேயருக்கும்,அமைச்சருக்கும் உள்ள பிரச்சனையில் தங்களை பலிகடா ஆக்குவதாக வேதனையுடன் பெண் திமுக கவுன்சிலரின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து மேயர் மகேஷிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி கேட்கையில்” இது அரசியல் கால் புரட்சி காரணமாக இது போன்ற அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது,தான் அரசியல் தெரியாதவன் அல்ல, பெண் கவுன்சிலர் குற்றம் சொல்வது போல் எதுவும் இல்லை, தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார், தனது பணி தமிழகத்தில் நாகர்கோவில் மாநகராட்சியை முதல் மாநகராட்சி ஆக்குவது, எனவே யாரையும் எந்த வார்டையும் புறக்கணிக்கவில்லை என தெரிவித்தார்