லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது ; பணிநேரம் முடிவதற்கு முன்பே மூட்டையை கட்டிய அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 4:23 pm

கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் விவசாயி சேகர். இவருக்கு சொந்தமான கட்டிடம் தனிநபருக்கு வாடகைக்காக விடப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்தை குடியிருப்பாக தற்போது மாற்றியுள்ளார்.

இந்த நிலையில், வியாபார தளமாக இருந்த மின் இணைப்பை, குடியிருப்புக்கான மின் இணைப்பாக மாற்ற கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மின்வாரிய அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் திருநீர்ச்செல்வம் விண்ணப்பதாரர் சேகரை பல முறை அலைகழித்ததாக கூறப்படுகிறது.

பின் இது தொடர்பாக சேகர், மின்வாரிய வருவாய் கண்காணிப்பாளரிடம் மின் இணைப்பை மாற்றித்தர வலியுறுத்திய போது லஞ்சமாக 6000 ரூபாய் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் சேகர் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாறுவேடத்தில் மின்வாரிய அலுவலகத்தில் நுழைந்து, ரசாயன பவுடர் தடவிய ஆறாயிரம் ரூபாயை விவசாயி சேகர், திருநீர்ச்செல்வத்திடம் தரும்போது கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை கால நெருக்கத்தில் கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் கண்காணிப்பாளர் திருநீர்ச்செல்வம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களில் அதிகாரிகள் அச்சத்தில் வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே அவரவர் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி