இரவு நேர போக்குவரத்து தடை எதிரொலி : 2வது நாளாக பண்ணாரியில் போக்குவரத்து நெரிசல்.. கொந்தளிப்பில் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 11:22 am

ஈரோடு : இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலகு ரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக செல்ல வந்த அனைத்து கனரக வாகனங்களும் பண்ணாரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையிலும், பவானிசாகர் செல்லும் சாலையிலும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பின்னர் நேற்று காலை 6 மணி முதல் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கும் இதேபோல் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இருந்தும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.


இதன் காரணமாக ஒவ்வொரு வாகனத்திலும் முந்திக் கொண்டு சென்றதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து பின்னர் சுமார் பதினொரு மணிக்கு மேல் ஓரளவு போக்குவரத்து சீரானது.

மேலும் நேற்று மாலை மீண்டும் மாலை 6 மணிக்கு திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படாததால் கர்நாடக செல்ல வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மீண்டும் இன்று காலை 6 மணிக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்தும் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் இருந்தும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதை மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், இரவு நேர போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த போது போக்குவரத்து சரிவர இருந்ததாகவும் தற்போது இரவு நேர போக்குவரத்து தடை செய்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் இதே நிலை நீடித்தால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ