மீண்டும் சோதனையில் லாட்டரி மார்ட்டின்.. விசிக பிரமுகர் வீட்டிலும் சோதனை!
Author: Hariharasudhan14 November 2024, 9:45 am
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களிலும், சென்னையில் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர்: கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச்சில் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்ட்டின் உள்ளிட்டோருடன் இணைந்து, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, நாகராஜன், மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கைக் கொண்டு, சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியது.
இந்நிலையில், கோவை மாவட்டம், துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (நவ.14) காலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், மார்ட்டினுக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரிக்குமாறு விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் அடிப்படையிலே இந்தச் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குளியலறையில் இருந்து கால்.. சிக்கிய பேராசிரியர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!
அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இவர் லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆவார்.
0
0