நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2025, 7:56 pm

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற நாளை கூடுகிறது.

அனைத்து கட்சிகளும் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நீட் தொடர்பான தமிழ் நாட்டின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்; நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டமன்றத்தில் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்?

பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் 6.4.2025 அன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, நீட் குறித்த தனது பொய் முகமூடி தமிழக மக்களிடம் வெளிவந்துவிட்டதை மறைக்கும் விதமாக, நீட் நுழைவுத் தேர்வு விலக்கை வழங்கினால்தான் அஇஅதிமுக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்போம் என்று ‘கண்டிஷன்’ விதிக்கச் சொல்கிறார்.

நான் கேட்கிறேன், திரு. ஸ்டாலின் 2019, 2021, 2024 தேர்தல்களில் காவிரியில் கர்நாடக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்கு ஒத்துக்கொண்டால்தான் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று ‘கண்டிஷன்’ போட்டாரா ?

உச்சநீதிமன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்திய பிறகு, 142 அடியிலிருந்து 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க சம்மதித்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்று ‘கண்டிஷன்’ போட்டாரா? நீட் விஷயத்தில் தாம் முழுமையாக தோற்றுவிட்டோம், இனி தமிழக மக்களிடம் தனது பொய் நாடகம் எடுபடாது என்பதை உணர்ந்த பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அரசு விழாவில் எதை பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றியுள்ளார்.

Edappadi Palanisamy Announce Aiadmk will Not participating in TN Government All Party Meeting

2026-ல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக 9.4.2025 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அஇஅதிமுக, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது.

நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது மகன் திரு. உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
  • Leave a Reply