நரிக்குறவர் மக்களுடன் தேநீர் அருந்திய எடப்பாடி பழனிசாமி ; எம்ஜிஆர் கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளை புதுப்பித்து வழங்கிய நிகழ்வில் சுவாரஸ்யம்!!
Author: Babu Lakshmanan3 January 2023, 2:24 pm
விழுப்புரம் ; ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது கோரிக்கை வைத்தது போல். தற்பொழுது நான் கோரிக்கை வைப்பதாகவும், பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் வசித்து வரும் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால், பல ஆண்டுகளாக வசிப்பதற்கு வீடுகள் இல்லாமல் அவதி உற்று வந்த நிலையில், அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 20 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இந்த தொகுப்பு குடில்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி திறந்து வைத்து, ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பாசிமணி, ஊசிமணி உள்ளிட்ட அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை வழங்கி அவர்களோடு, அமர்ந்து சிற்றுண்டி மற்றும் தேனீர் அருந்தி சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசுகையில்:- அதிமுக அரசு நரிக்குறவர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை மாணவர் மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில், இலவச மடிக்கணினி வழங்கியதோடு, மட்டுமல்லாமல் இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை வகுத்தது.
ஏழை என்ற சொல் இல்லாமல் உருவாக்குவது அதிமுகவின் லட்சியம். பொங்கல் என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது கரும்பு தான். அந்த கரும்பை கூட தற்பொழுதைய திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிலிருந்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அதிமுக உட்பட விவசாயிகள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்துள்ளனர்.
மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசு ஆயிரம் மட்டுமே அறிவித்துள்ளது. தான் முதல்வராக இருக்கும் பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரி கேட்டார். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினை பார்த்து உளுந்தூர்பேட்டையில் இருந்து நான் கேட்கிறேன், தாங்கள் அப்போது கோரிக்கை வைத்தது போல், இப்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 5000 வழங்க வேண்டும், என பேசினார்.