ஒற்றைத் தலைமையல்ல.. சாதாரண தொண்டன் தான்.. ஒருசிலரை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்போம் ; எடப்பாடி பழனிசாமி!!
Author: Babu Lakshmanan20 April 2023, 7:42 pm
திமுக அரசை எதிர்க்க தெம்பு, திராணி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது;- அதிமுக பிரதான எதிர்கட்சியாக செயல்படும். தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்கட்சியாக செயல்படும். அதிமுக என்பது ஒன்றுதான் என்பதற்கான தெளிவு கிடைத்துவிட்டது. சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகரிடம் மீண்டும் மனு அளிப்போம்.
என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி. ஒற்றைத் தலைமையாக நினைக்கவில்லை. தொண்டனாக தொடர்ந்து உழைப்பேன். மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை இனிமேல் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. ஒருசிலரை தவிர வேறு யார் மீண்டும் வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வோம்.
நாங்கள் குறிப்பிடும் ஒருசிலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அது குறித்து யாரும் குழப்ப வேண்டாம். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிறைவேற்றுவோம் என சூளுரை ஏற்போம். திமுக அரசை எதிர்க்க தெம்பு, திராணி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி உள்ளது ; கர்நாடகாவில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். அந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.