பலூன் தான்.. ஆனால் உள்ளே எதுவும் இல்லை.. இபிஎஸ் கடும் சாடல்!
Author: Hariharasudhan6 January 2025, 12:13 pm
ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.
சென்னை: புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது, தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நிமிடங்களிலேயே வெளியேறினார். அதேநேரம், அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து, ’யார் அந்த சார்’ என்ற பேட்ஜ்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் சட்டப்பேரவைக்குள் முழக்கங்களை எழுப்பினர். எனவே, சபாநாயகர் அப்பாவு அவர்களை அமருமாறு கூறினார். ஆனால், அவர்கள் முழக்கங்களைத் தொடர்ந்ததா ல்,அவர்களை அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றச் சொன்னார் அப்பாவு.
இதனைத் தொடர்ந்து, வெளியில் வந்த சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆளுநர் உரை, பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் பெரிதாக உள்ளது. ஆனால், அதில் ஒன்றுமில்லை. தமிழக சட்டசபையின் மரபு எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆளுநர் உரையைப் புறக்கணிக்கவில்லை, திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ஆளுநர் உரை இல்லாமல் சபாநாயகர் உரையாகவே அது இருக்கிறது. ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. பேசியதையே திரும்பத் திரும்ப இந்த அரசு பேசி வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசு இனியும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது, விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தோம். யார் அந்த சார்? எதற்காக இந்த அரசு பதற்றப்படுகிறது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அமைச்சர்கள் மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்களே, யார் அந்த சார் என்று கேட்டால், இந்த அரசுக்கு ஏன் கோபம் வருகிறது?
மாணவி பலாத்காரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதுதான் இந்த அரசினுடைய கடமையாக இருக்க வேண்டும். ஆனால், யாரையோ காப்பாற்றுவதற்கு இந்த அரசு முயற்சி செய்து கொண்டிருப்பது தான் சந்தேகம்.
இதையும் படிங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!
அதனால்தான் தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் யார் அந்த சார் என கேட்கும் அளவுக்கு குரல் ஒலிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால், உண்மையில் அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் தான் ரிட் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை கொண்டு செல்கிறார்.
இதனால் தான் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த வழக்கை அதிமுக தொடர்ந்தது. இந்த அரசை நம்பி எந்த பயனுமில்லை என்பதால், நாங்கள் இதில் தலையிட்டோம்” என அவர் தெரிவித்தார்.