தினந்தோறும் கொலை பட்டியல்.. சட்டப்பேரவைக்கு வெளியே வெளுத்துவாங்கிய இபிஎஸ்!

Author: Hariharasudhan
20 March 2025, 1:24 pm

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4 கொலைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதன் பின்பு, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச முயற்சித்தோம். ஆனால், சபாநாயகர் அப்பாவு என் கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மதுரை அருகே காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

Edappadi Palaniswami

இதில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்துள்ளார். கிட்டத்தட்ட சினிமா பாணியில் நடந்த கொடூரம் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் திமுக நிர்வாகி குமார் கடத்திச் செல்லப்பட்டு கொலை என்று ஒவ்வொரு நாளும் கொலைப் பட்டியல் வெளியாகி வருகிறது.

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு போலீசாரைக் கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஜாகீர் உசேன், தனது உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்தபோது, காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது, முதலமைச்சர் அதனை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க: மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உங்களுடைய ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா, அப்படி நடக்கவில்லையா என்கிறார். அதெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள். கொலைகளை எண்ணிக்கை அடிப்படையிலா ஒப்பிட வேண்டும்? மக்களின் பாதுகாப்பில் விளையாடக்கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வதே அரசின் கடமை.

தங்கம், வெள்ளி விலை நிலவரத்தைப் போல் கொலை நிலவரம் வந்துவிடக் கூடாது. சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் பயந்துகொண்டு வெளிநடப்பு செய்யவில்லை. எங்களைப் பேசுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

  • எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!
  • Leave a Reply