வீண் போராட்டம்.. நாடகப் போராட்டம்.. அதிமுக, பாஜக கடும் விமர்சனம்!

Author: Hariharasudhan
7 January 2025, 1:42 pm

ஆளுநரைக் கண்டித்து திமுகவின் போராட்டம், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ள ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், காவல்துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்தி வருகிறது.

முறையாக அனுமதி கோரப்பட்டு, மிகவும் அமைதியாக அறவழியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஸ்டாலின் மாடல் அரசு, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?

annamalai and EPS about DMK Protests

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்ப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் மாடல் அரசு நடத்திய தீர்மான நாடகமே அம்பலமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த போராட்டத் தடை மூலம் திமுக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைய ஆதரவாகவே இருக்கின்றது என்ற உண்மை மக்களிடையே உறுதியாகிவிட்டது. மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காமல், அவற்றிற்கான உரிய அனுமதிகளை வழங்குமாறு ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை.

இதையும் படிங்க: ஒரு ஸ்கூல் குழந்தை போல.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த கனிமொழி!

ஆனால் மாண்புமிகு ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அனுமதியும் வழங்காமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply