வேகமெடுக்கும் கர்நாடகா.. தூங்கும் தமிழகம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 9:29 pm
வேகமெடுக்கும் கர்நாடகா.. தூங்கும் தமிழகம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவிப்பு!
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனது தலைமையில் வரும் 29ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,“காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும்; தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும்; கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத விடியா திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில், தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மக்களின் ஜீவாதார உரிமையை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
0
0