ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத.. கூட்டணி கணக்கு? இபிஎஸ் கடும் விமர்சனம்!
Author: Hariharasudhan21 March 2025, 2:52 pm
எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் இன்றைய நாளில், அதிமுக உறுப்பினர் இலவச லேப்டாப் திட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ ஒருவர் அமர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்கள் மடியில் உள்ள கனத்தை பறித்துக் கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, “கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம், கூட்டணிக் கணக்கிலும் ஏமாற மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பட்ஜெட் மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலுரையில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் கோடி கடன் பெற்றதாகத் தெரிகிறது. இதனை மறைத்து சதவிகித அடிப்படையில் நிதியமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
73 ஆண்டு கால ஆட்சியில், தமிழக அரசின் கடன் ரூ.5.18 லட்சம் கோடி. ஆனால், திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி வாங்கியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின் நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழுவில் இருந்த நிபுணர்கள் கடந்த 4 ஆண்டுகளில் என்ன அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறார்கள்?
அதன் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கடன் குறைந்துள்ளதா? என்று எதுவும் இல்லை. அதேபோல், தமிழக அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடன் வாங்கியது மட்டுமே திமுக அரசின் சாதனையாக உள்ளது. புள்ளி விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
அதேபோல், பட்ஜெட் கணக்கை நிதியமைச்சர் பார்த்துக் கொண்டால் போதும். எங்களின் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். அதிமுகவுக்கு கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் வரும்போது அமைக்கப்படும்.
இதையும் படிங்க: நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!
வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்போம். எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது” எனத் தெரிவித்தார்.