மழைநீர் எங்குமே தேங்கவில்லை.. வெற்று போட்டோஷூட்.. சென்னை மழை சொல்வது என்ன?

Author: Hariharasudhan
30 November 2024, 2:10 pm

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த இடத்திலும் பிரச்னை இல்லை என ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை: தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் (Fengal Cyclone) காரணமாக, சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. சில சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. தொடர்ந்து, நிவாரணப் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர்களுடன், அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், நடவடிக்கைகள், மீட்புக் குழுவினர் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2, 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.

இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் எனச் செய்தி வந்திருக்கிறது. இதனை முன்னிட்டு, மாநில அவசர கால கட்டுப்பாடு மையத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களைத் தொடர்பு கொண்டு, அங்கு உள்ள நிலவரங்களை கேட்டறிந்தோம்.

பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏதேனும் இருந்தாலும் அதனைச் சமாளித்துக் கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

MK Stalin and EPS

இபிஎஸ் எக்ஸ் தளப் பதிவு: இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.

புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன்,
மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

இதையும் படிங்க: இப்போவே இப்படியா? சென்னையைச் சூழ்ந்த மழை வெள்ளம்.. மிரட்டும் ஃபெஞ்சல்

மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கேச் சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 207

    0

    0