இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என சொல்லி சொல்லி மாதம்தான் கடந்தோடுகிறது : எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 7:48 pm

இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என சொல்லி சொல்லி மாதம்தான் கடந்தோடுகிறது : எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2 ஏ தேர்வு என எந்த தேர்வாக இருந்தாலும் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முடிவு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.

இதனிடையே எப்படியாவது வேலைகிடைக்கும் என தேர்வை எழுதி காத்திருக்கும் தேர்வர்கள் எப்போது தான் தேர்வு முடிவு வெளியாகும் என்ற ஏக்கத்தில் காத்துக்கிடக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் பேட்டி அளித்த போது, தேர்வு எழுதியவர்களின் மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும். டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல், டிசம்பர் மாதம் ஆரம்பித்து 2-வது வாரத்திலும் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதுபற்றி பதில் அளிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்’ என்று கூறினார். மேலும், தேர்வு முடிவு தாமதத்துக்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் என்று கூயிருக்கிறார். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மீம்ஸ் போட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை.

பல்வேறு நிர்வாக குளறுபடிகளுக்கு இடையே தேர்வு நடைபெற்ற நிலையில் , தேர்வு முடிவுகளும் வெளியிடபடாமல் இருப்பது தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது, செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளே 2 மாதங்களில் வெளியாகிவிட்ட நிலையில், மாநில தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்களாக வெளிவராமல் இருக்கின்றது. சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரோ “இன்று வந்துவிடும்- நாளை வந்துவிடும்” என்று சொல்லி மாதங்களும் கடந்தோடுகிறதே தவிர முடிவுகளை வெளியிட எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டணங்கள்.

ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் 5.50லட்சம் அரசுப்பணிகள் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 187ன் படி தற்போது வரை 2.5லட்சம் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மெத்தனப் போக்கின் மொத்த உருவமாக இருக்கும் இந்த செயலற்ற விடியா அரசு, மற்ற வாக்குறுதிகளை போலவே இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது. அமைப்பு குளறுபடிகளைக் களைவதற்கு, இந்த விடியா திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் காலி அரசு பணியிடங்களை நிரப்ப , முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் ஒழுங்குடன் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்திட வேண்டுமென இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

  • Rajinikanth Apologize To Nepoleon போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?
  • Views: - 318

    0

    0