இதுதான் first & last.. ஓரங்கட்டிய இபிஎஸ்.. பாஜகவுக்கு முற்றுப்புள்ளி?
Author: Hariharasudhan14 November 2024, 4:30 pm
2026 தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக லண்டன் சென்று உள்ள நிலையில், இம்மாத இறுதியில் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் மாநிலம் திரும்புகிறார். இதனிடையே, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் (நவ.14) செய்தியாளரைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், “பாஜக உடனான கூட்டணி தொடர்பாக ஏற்கனவேக் கூறிவிட்டேன். இந்த விஷயத்தை வேண்டும் என்றே திட்டமிட்டு, மீடியா வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்கவில்லை.
அதேபோல், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளோம். எனவே, மக்கள் விரோத திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், பாஜகவைத் தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளுக்காக மட்டும் தான்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. அதிமுக முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எனது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அதிமுக ஆட்சியில் மட்டும் தான் அதிக அளவிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதன் விளைவாக, தற்போது நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட அதிமுகவை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள்?. எனவே, மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். 2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, தற்போதைய 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெற்று உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசாங்கம் கட்டினால் தப்பில்லை.. மக்கள் கட்டினால் இடிப்பதா? ஸ்கோர் செய்த செல்லூர் ராஜூ!
முன்னதாக, திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடைய கட்சிகள் உடன் கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியது பல்வேறு கேள்விகளை அரசியல் மேடையில் வைத்த நிலையில், தற்போது இபிஎஸ்சின் பதிலால், பாஜகவுக்கு கேட் இழுத்து மூடப்பட்டு உள்ளது உறுதி ஆகி உள்ளது.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0
0