திமுக அரசு பதவி விலக வேண்டும்.. வெளிநடப்பு செய்த இபிஎஸ் வலியுறுத்தல்!

Author: Hariharasudhan
14 March 2025, 11:38 am

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். இதனையடுத்து, பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியபோதே, அதிமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின், அப்போதைய சபாநாயகர் தனபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய கோரிக்கையை சட்டமன்ற விதிகளின்படி விவாதத்துக்கு எடுத்துக் கொண்டோம்.

அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் கொண்டு வந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவி நீக்க கோரிக்கையை திமுக அரசு விவாதத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதேபோல், கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

EPS

இதன் அடிப்படையில், நேற்று அமலாக்கத்துறை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முடியும்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதையும் படிங்க: தொட்டதெல்லாம் ஹிட்… லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த அரசு இதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்தச் சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்தச் செய்தியும் வெளியிடாத காரணத்தால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்” எனக் கூறினார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?