திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்.. பட்டியலிட்ட இபிஎஸ்!

Author: Hariharasudhan
20 November 2024, 4:41 pm

மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கபட வேடம் புனைவதில் Ph.D பட்டம் பெற்ற திமுகவினர், அதிமுக மீது பாய்வது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்கா. அதன்படி, சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி பிரியா, கால் தசைப் பிடிப்புக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு 2022ஆம் ஆண்டு நவம்பரில் சிகிச்சைக்காகச் சென்ற போது, அரசு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும் அவரது வலது காலை இழந்ததோடு, அவரது உயிரையும் பறிகொடுத்தது இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து அகலவில்லை.

சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த கோதண்டபாணியின் 7 வயது பெண் குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், வலது கால் ஊனம் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தலைமைச் செயலகத்தில் தனது மகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவலமும் நடந்தேறியது.

2023ஆம் ஆண்டு ஜூனில் கடலூர் மாவட்டம், கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த சாதனாவுக்கு, கடலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் சளிக்கு ஊசி போடுவதற்குப் பதிலாக, இரண்டு முறை நாய் கடி ஊசி போட்ட அவலமும் நடந்தேறியது.

கடந்த ஆண்டு ஜூலையில் இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்த, விளம்பர மோகத்துடன் மதுரையில் 10 கி.மீ. தூரத்திற்கு குருதிதான விழிப்புணர்வு மாரத்தான்-ஐ விடியா திமுக ஆட்சியின் சுகாதாரத் துறை அமைச்சர் நடத்தியபோது, கண்டிப்பாக மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வற்புறுத்தியதாகவும், அதனால் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்.

சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர்கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

மேலும், அவரை மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசரக் கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்த நோயாளி பலமணி நேரம் காயத்துடன் அவதியுற்றதையடுத்து, டாக்டர் விஜயபாஸ்கர், தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையின் வலது கை நீக்கப்பட்டதுடன், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி கடைசியில் தங்கள் குழந்தையை இழந்துவிட்டோம் என்று அந்தக் குழந்தையின் தாய் கண்ணீருடன் பேட்டி அளித்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

மேலும், 2023 தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரிரு நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த குழந்தையின் உடல் ஈவு இரக்கம் இல்லாமல் கட்டைப் பையில் வைத்துக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பு ஒருமுறை அட்டைப் பெட்டியில் வைத்து உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் உடல் கொடுக்கப்பட்டது. அப்போதே இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தேன்.

MA SUBRAMANIAN

கடந்த மாதம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதியை பணிகள் முடிந்தும், பயன்பாட்டிற்கு திறந்து வைக்காத காரணத்தால், சென்ற மாதம் பணி முடித்து 30 கி.மீ. தூரமுள்ள தனது வீட்டில் ஒய்வெடுக்கச் சென்ற மருத்துவர் மனோரஞ்சிதன் சாலை விபத்தில் தனது இன்னுயிரை இழந்துள்ளார்.

கடந்த வாரம் கிண்டி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர் மருத்துவரைத் தாக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடந்தேறியது. இந்நிலையில், அடுத்த நாள் சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் உயிரிழந்த சோகமும் கண் கலங்க வைத்தது.

இதையும் படிங்க: ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு.. பட்டப்பகலில் கொடூரம்!

சட்ட விரோதமாக செயல்பட்டு, ‘குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த யூ டியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மந்திரிகளாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம்.

தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல – திறமைசாலிகள். நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்போவது திண்ணம்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!