ஜோசியத்தை கையிலெடுத்த ஸ்டாலின்.. கிறங்கடித்த இபிஎஸ்.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
24 அக்டோபர் 2024, 1:00 மணி
MK Stalin - EPS
Quick Share

அதிமுக சரிந்து விட்டது என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், ஆனால் அது பலிக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நேற்று (அக்.23) கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் மேடையில் பேசிய அவர், “திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஆனால், விரிசல் ஏற்படாது. பக்கத்து வீட்டில் என்ன தகராறு என சிலர் காத்திருப்பர். அதுபோல் தான் எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார்.

தனது கட்சியை வளர்க்க முடியாதவர், அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியில் உள்ள குழப்பங்களைச் சரிசெய்ய முடியாமல் இருக்கும் நிலையில், திமுக கூட்டணி உடையப் போகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி கற்பனையில் இருக்கிறார் என்று தான் நினைத்தேன், ஆனால் அவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடராக மாறினார் எனத் தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர், எனவே கனவு காண வேண்டாம்” என பகிரங்கமாக விமர்சித்தார் ஸ்டாலின்.

அதேநேரம், அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி வடக்கு தெற்கு ஒன்றியம், வனவாசி பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் வனவாசியில் வைத்து நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நான் கனவு காண்கிறேன் என கூறி உள்ளார். அதிமுக சரிந்து விட்டது என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், அது பலிக்காது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெறும் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்படியென்றால், திமுகவுக்கு தான் சரிவு, அதிமுகவுக்கு செல்வாக்கு. திமுக வலிமையான கூட்டணி என ஒரு அமைச்சர் கூறுகிறார். திமுக கூட்டணியில் திமுகவை விமர்சித்து முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அடுத்ததாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசி வருகின்றனர். அதனால் திமுக கூட்டணி கலகலத்து வருகிறது. அதுவே சந்தோஷமாக இருக்கிறது” என பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுச் சடங்கே வேண்டாம்.. கலங்க வைக்கும் ஆடியோ.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், ஆளும் திமுக – அதிமுக இடையே கடும் விமர்சனப் பேச்சுகள் எழத் தொடங்கி உள்ளது. அதிலும், கூட்டணி குறித்தான பேச்சுக்கள் அரசியல் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும், தேசிய கட்சி ஒன்று கூட்டணிக்கு அழைத்தது என எடப்பாடி பழனிசாமி பேசியதில், அதிமுகவின் கூட்டணி மற்றும் 2026 தேர்தல் கணக்கு தற்போதே தொடங்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Gas Leak திருவொற்றியூரில் வாயுக்கசிவு.. பள்ளி மாணவிகள் மயக்கம்.. பெற்றோர் முற்றுகை!
  • Views: - 93

    0

    0

    மறுமொழி இடவும்