அங்க போவாராம்.. அவுங்கள பார்ப்பாராம்.. ஆனா திமுக இல்லையாம்.. இபிஎஸ் கடும் விளாசல்!
Author: Hariharasudhan11 January 2025, 5:04 pm
அண்ணா பல்கலை விவகாரத்தில், யார் அந்த சார் என்பதில் பெரிய புள்ளி சம்பந்தப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் வரை மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலின் போது நீட் விலக்கு பெறுவோம் எனக் கூறினர். ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் என முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து நகரங்களிலும் பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளது. வருவாய் அதிகரித்து மகளிர் உரிமைத் தொகையை கொடுக்கவில்லை. கடனை வாங்கித்தான் பணம் கொடுக்கின்றனர்.
இதன் மூலம், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என்ற சாதனையை திமுகவின் கீழான தமிழக அரசு படைத்துள்ளது. சபாநாயகர் ஆளுங்கட்சிக்குத் தான் ஆதரவாகப் பேசுவார். பொள்ளாச்சி வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் தான் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
யாரை குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்களைத் தான் கைது செய்ய முடியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்களுக்கு முன்பாகவே புகார் அளித்ததாகக் கூறுவார். எதன் அடிப்படையில் அப்படி கூறுவார்? நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்த நாளையும், கிரைம் நம்பரையும் ஆதாரமாகக் கொடுத்திருக்கிறோம்.
பொள்ளாச்சி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதன் தீர்ப்பு வரும்போது உண்மை என்னவென்று தெரியும். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், அதிமுக இல்லையென்றால் விஷயத்தை மறைத்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் யார் என்று அனைவருக்குமே தெரியும்.
திமுக மாநாட்டுக்குச் செல்வாராம், முக்கியப் பிரமுகர்களை பார்ப்பாராம், ஆனால் திமுகவில் இல்லையாம். இந்த விவகாரத்தில் யாரோ ஒரு பெரிய புள்ளி சம்மந்தப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான் யார் அந்த சார்? எனக் கேட்கிறோம். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு அமைச்சர்கள் ஏன் பதற்றம் அடைகின்றனர்?
நாங்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாத போது ஏன் இவருக்கு பதற்றம் வருகிறது? யார் அந்த சார் விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பதற்கு நீங்கள் ஏன் ஆட்சி நடத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இதுக்குமேல என்ன வேணும்…விடாமுயற்சி COMING SOON…துபாயில் அஜித் சொன்ன தகவலால் வைரலாகும் வீடியோ..!
மேலும், பெரியார் மீதான சீமானின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “உண்மையில் வருத்தத்திற்குரியது. மறைந்த பெருந்தலைவர் பற்றி அவதூறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் சாமானிய மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் போல் இருந்தவர்களால் தான் முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். அதனால் அப்படியொரு தலைவர்களை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறதா என்ற கேள்விக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.