3 முறை கூட்டணி இல்லை என ஒலித்த குரல்.. துணிந்து நின்று தூள் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 7:16 pm

3 முறை கூட்டணி இல்லை என ஒலித்த குரல்.. துணிந்து நின்று தூள் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு நிலவி வந்து சூழலில், சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கினர். பின்னர் கூட்டணி பற்றி எந்த கருத்தையும் வெளியிடக்கூடாது என அதிமுகவில் இருந்து தகவல் பரவியது.

இந்த நிலையில்தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் ‘கூட்டணி இல்லை’, ‘கூட்டணி இல்லை’, ‘கூட்டணி இல்லை’ என மூன்று முறை முழங்கியதாக அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட்கிழமை), கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மான விவரத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 315

    0

    0