‘எம்பி டிஆர் பாலு எங்களை ஏமாற்றி விட்டார்’ ; பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு… போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம்..!!
Author: Babu Lakshmanan6 July 2023, 1:29 pm
சர்வதேச இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், போராசிரியர் மஞ்சநாதன் தலைமையிலான குழு வருகையை கண்டித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 2ம் தேதி சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பரந்தூரில் 20,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க உத்தேசித்துள்ள பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் புவியியல் மற்றும் நீரியல் அம்சங்களை ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்றும், உள்ளூர் மக்கள் தங்கள் கவலைகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கலாம் என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கடந்த வருடம் அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் உறுதியளித்திருந்தது.
கோடை காலத்துக்கு முன்பு , நீர்நிலைகள் நிறைந்து காணப்பட்டபோது, மச்சநாதன் கமிட்டி குழு ஆய்வு செய்ய வராமல், இப்போது ஏரி குளம் போன்றவற்றில் தண்ணீர் எல்லாம் வற்றிய நிலையில், குழு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி மச்சநாதன் குழுவை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத் திட்டத்தை எதிர்க்கும் மக்கள், தங்கள் கிராமங்களில் புதிய விமான நிலையம் வராது என்று அரசாங்கம் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்து 345வது நாளாக இரவு நேர அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு செயலாளர் ஜி.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டத்தைத் தொடருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என கூறி, உள்ளூர் மக்கள் தங்கள் பகுதியின் நீரியல் மற்றும் புவியியல் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம். அனைத்து தியாகங்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றார்.
மேலும் ‘வரைபடத்தை’ காட்டி, கம்பன் கால்வாய் என்ற பழங்காலக் கால்வாய் உட்பட ஏராளமான நீர்நிலைகள், கால்வாய்கள் நிறைந்த இந்த பகுதியில் விமான நிலையத் திட்டம் அமைவது பொருத்தமற்றது எனவும் கூறினார்.
இதையும் மீறி மஞ்சநாதன் கமிட்டி வந்தால் நாங்கள் சாலை மறியல் செய்வதோ அல்லது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி செல்வதோ நடைபெறும் என கோபத்துடன் தெரிவித்தனர். மேலும், மக்களிடையே பேசும்போது, டி ஆர் பாலு எம்பி ஆவதற்கு முன்னதாக பலவிதமான வாக்குகளை அளித்துவிட்டு எங்களை ஏமாற்றி விட்டார். கோடிகணக்கில் சம்பாதித்துவிட்டார். எங்கள் கிராமத்தை பற்றி கண்டுகொள்ளவில்லை, என சாடினர்.
அதனால் தான் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மேலேரி, மகாதேவி மங்கலம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார்.
அதிலேயும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் தான் ஏகனாபுரம் கிராம மக்கள் 345 நாளாக இரவு நேர அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்றார்.
சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை மீட்கவே அதிகாரிகளுக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. அத்தகைய பிராந்தியத்தில் விமான நிலையம் எவ்வாறு அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
சர்வதேச இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான கமிட்டி வருவதை கண்டித்து ஏகனாபுரம் மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால், மஞ்ச நாதன் குழு சிங்கள பாடி போன்ற கிராமங்களை பார்வையிட சென்ற காரணத்தினால் உண்ணா விரதத்தை கைவிட்டு, அம்பேத்கர் சிலையிலிருந்து மதுர மங்கலம் செல்லும் சாலையில் சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் கோஷம் எழுப்பி கொண்டே ஊர்வலமாக சென்றனர். 80 பெண்கள் உட்பட மொத்தம் 200 நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று பேருந்துகளில் ஏற்றி வல்லக்கோட்டை குமரன் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் வருவதைக் கண்டித்து 345 இரவுநேர அறவழி போராட்டம் செய்த மக்கள் முதன்முறையாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.