டார்ச் லைட் அடித்து பெரும் விபத்தை தவிர்த்த முதிர்ந்த தம்பதி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வெகுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 4:46 pm

டார்ச் லைட் அடித்து பெரும் விபத்தை தவிர்த்த முதிர்ந்த தம்பதி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வெகுமதி!!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், நேற்று முன்திம் நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை – கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதி செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.

உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மேலும் தம்பதிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்