ஒற்றை காட்டு யானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் உயிரிழப்பு.. கோவை குற்றாலம் அருகே அதிர்ச்சி!!!
Author: Babu Lakshmanan28 June 2022, 11:37 am
கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காளிதாஸ் (59). அப்பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை காளிதாஸ் சாடிவயல் சோதனைசாவடியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சர்க்கார் போர்த்தி பேருந்து நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை காளிதாஸை வழிமறித்து தாக்கியது.
இதில் அலறிய காளிதாஸின் சத்தம்கேட்டு சென்ற பொதுமக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவரை மீட்டு காருண்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற காருண்யா நகர் போலீசார் காளிதாஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதே பிரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.