மாட்டு கொட்டகையில் யானை சாணம் : காட்டிக் கொடுத்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2023, 1:10 pm
மாட்டு கொட்டகையில் இருந்த உணவு பொருட்களை உண்டு சென்ற காட்டுயானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் அதிகாலையிலேயே சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதாக தடாகம் பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு ஆண் காட்டு யானைகள் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் புகுந்து அங்கிருந்த தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோள கருதுகளை உண்டு சென்றுள்ளது.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மாடுகளை ஒன்றும் செய்யவில்லை. இதே போல் அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் யானைகள் வெளியில் வரும் நேரத்திலேயே அவற்றை மீண்டும் வனத்திற்குள் வனத்துறையினர் விரட்டினால் மட்டுமே யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.