யானை தந்தங்களை விற்க முயற்சி… மறைந்திருந்து கடத்தல் கும்பலை மடக்கிய வனத்துறையினர்.. விசாரணையில் சிக்கிய வேட்டை தடுப்பு காவலர்…!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 12:02 pm

கோவை ; மேட்டுப்பாளையத்தில் ஒரிஜினல் மற்றும் போலி யானை தந்தங்களை விற்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு பிரிவு தெற்கு மண்டலம் மற்றும் தமிழக அரசின் கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கு சட்டவிரோதமாக தந்தங்களை விற்க முயன்ற பிரதீஷ், சின்னப்பாண்டி, சுப்பிரமணி ஆகிய மூவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து பிடிபட்ட மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், குணசேகரன், ராஜ்குமார், மனோஜ், நஞ்சுண்டன் என மேலும் நான்கு நபர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

இந்த நால்வரும் அளித்த தகவலில் பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டைத்தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2017 ஆம் ஆண்டு தாம்புக்கரை காப்புக்காடு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது, வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்து அதனை விற்க முயன்றதும் தெரிய வந்தது.

இதை அடுத்து வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் உட்பட நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரபகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் எட்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் உட்பட மரத்தினால் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு யானை தந்தமும் கைப்பற்றப்பட்டது. போலி யானை தந்தத்தை எதற்காக குற்றவாளிகள் வைத்திருந்தார்கள், என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 393

    0

    0