தேவையே இல்லாத ஆணி அமலாக்கத்துறை… முழுக்க முழுக்க அச்சுறுத்த மட்டுமே : கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 1:32 pm
சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘என்னைப் பொறுத்த வரைக்கும் ரைடு, கைது இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. இதன் மூலமாக எந்த ஒரு ஆவணமும் கைப்பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது.
முழுக்க, முழுக்க தொலைக்காட்சி செய்திகளுக்கும் இதைக்கண்டு சிலர் ரசிக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தவிர வேறொன்றுமில்லை.
2014 இல் அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு 2023-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின் போது தலைமை செயலகத்தில் அமைச்சருடைய அலுவலகத்தை ஆய்வு செய்து அங்கிருந்து ஆவணத்தை கைப்பற்றி கடந்த ஆட்சியில் நடந்த குற்றத்தை நிரூபிப்பதற்காக இப்பொழுது விசாரிக்கிறேன் என்று கூறுவது அபத்தமான விஷயம். அமலாக்கத்துறை என்று ஒன்றே இருக்கக் கூடாது. சிபிஐயில் உள்ள உட்பிரிவுவுடன் இணைத்து விட வேண்டும் .
முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ரைடே தவிர வேற எதுவும் இல்லை கைது எல்லாம் நியாயமான விசாரணைக்கு தேவையே இல்லாத யுக்திகள்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியாது அவர் கூறிய அறிவுரை நல்ல அறிவுரை. பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். நானும் அதையே கூறுகிறேன்.
காசு பணம் துட்டு மணி சம்திங் சம்திங் தான் தமிழ்நாட்டு அரசியல். தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அது இல்லாத அரசியல் நடக்க வேண்டும் என்பதை தான் நானும் கூறுகிறேன். அதையே தான் விஜய்யும் கூறியிருக்கிறார் என்றால் என் கருத்துடன் ஒத்துபோகிறார் என்றுதான் அர்த்தம் என இவ்வாறு கூறினார்.