ஆள்வதால் தனிப்பட்ட வருத்தமா? மருத்துவருக்கு கத்திக்குத்து.. கிளம்பும் எதிர்ப்பு!

Author: Hariharasudhan
13 November 2024, 1:32 pm

சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததை அடுத்து, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், இன்று (நவ.13) காலை மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்து உள்ளார். அப்போது, அவரிடம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்து உள்ளார்.

பின்னர், அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மருத்துவர் பாலாஜியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். பின்னர், உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து கிண்டி போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவரை கத்தியால் குத்திய நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் தான் மருத்துவரைக் கத்தியால் குத்தியவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இவரது தாயார் இதே மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கு மருத்துவர் பாலாஜி அலட்சியமாக பதில் அளித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவரைக் குத்தியதாக விக்னேஸ்வரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிகிச்சைக்கு வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள பதிவில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார். அரசு தொடர்பான செயல்களுக்கு CMO TAMILNADU என்ற சமூக வலைத்தளப் பக்கத்தை பயன்படுத்தும் ஸ்டாலின், தனது அரசின் கீழ் இப்படியான நிலைக்கு தனிப்பட்ட MK STALIN என்னும் பக்கத்தைப் பயன்படுத்தி இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

MKS AND EPS

ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதையும் படிங்க: நெப்போலியனால் பாதுகாக்கப்படுகிறாரா இர்ஃபான்? அமைச்சரின் மாற்று பேச்சு!

கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 181

    0

    0