இபிஎஸ்க்கு தான் என்னுடைய ஆதரவு… மதுரை விமான நிலையத்தில் சீமான் பரபரப்பு கருத்து!!!
Author: Udayachandran RadhaKrishnan31 October 2023, 10:39 am
இபிஎஸ்க்கு தான் என்னுடைய ஆதரவு… மதுரை விமான நிலையத்தில் சீமான் பரபரப்பு கருத்து!!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும், சாதிய சிந்தனை உடையவன் இறைவனை வழிபடவே அறுகதையற்றவன் என்று கூறிய பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் என்று கூறுப்படும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவை போற்றுகின்ற நாள் இன்று.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக துணை முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு: அதற்குள் அரசியல் உள்ளது. தமிழர்களின் சொத்துக்கள் எல்லாம் விரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரவரின் நீர் வளம் அவரவர்களுக்கு என்று கேரளா, கர்நாடக நினைத்துக் கொண்டால் நம்முடைய வளங்கள் நமக்கு என்று நாம் எண்ண வேண்டியுள்ளது. பகைநாடுகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானுக்கு கூட சிந்து நதியிலிருந்து 80 சதவீத நீரை கொடுத்து வருகிறோம். இந்த நிலை நீடிப்பது தேச இறையாண்மைக்கு ஆபத்தானது. ஒரு மாநில தேர்தல் வெற்றிக்காக காங்கிரசும், பாஜகவும் ஒரு தேசிய இனத்தின் உரிமையை பறிகொடுக்க தயாராகி விட்டது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு ஓட்டு கூட இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்குவோம்.
வடமாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய விவகாரம் குறித்த கேள்விக்கு: இது தொடக்கம் தான். இஸ்ரேல் பாலஸ்தீன போன்று தான் இங்கும் நடைபெறுகிறது. 40 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளார்கள். வட கிழக்கு மாநிலங்கள் போல உள் நுழைவு அனுமதி கொடுக்க வேண்டும். விசா போன்ற உள் நுழைவு அனுமதி இருந்தால் குற்றச் செயலில் ஈடுபவர்கள் யார் என்று உடனடியாக தெரியவரும். குற்றம் செய்தவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தாலும் கூட விவரங்கள் இல்லாததால் கைது செய்ய முடியவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்வதற்காகத்தான் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசு போட்ட உத்தரவு தான். ஆனால் இது இஸ்லாமிய சிறை கைதிகளுக்கும் ராஜீவ் கொலை கைதிகளுக்கும் இது பொருந்தாது என்று தெரிவித்தது தான் பிரச்சனை. மதத்தின் அடிப்படையில் கைதிகளை பார்ப்பதை எப்படி ஏற்பது. மனிதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்வதற்காக வெடிகுண்டு வீசினால் நீட் தேர்வு நின்று விடுமா?
பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுந்தது குறித்த கேள்விக்கு: இது அருவருக்கத்தக்க, அநாகரீகமான செயல். அவர் மீது வெறுப்பு இருந்தால் அதை வேறு இடத்தில் செய்ய வேண்டும், அய்யாவின் புனிதமான ஒரு இடத்தில் அதை செய்வது அவரையே அவமதிப்பது போன்றது. எங்கள் ஐயா எந்தவித ஆடம்பரமும் விரும்பாத சன்னியாசி போல வாழ்ந்தவர் ஆனால் அங்கு முதல்வர் வருவதற்காக ஏக்கர் கணக்கில் வாழை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அது யாருக்கும் பயனில்லை. இந்த ஆடம்பரங்கள் வருத்தம் அளிக்கிறது வரும் காலங்களில் இதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
வாடகை வண்டியில் செல்லக்கூடாது என்கிறார்கள். 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இது அவர்மீதான அவமதிப்பாக உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நாங்கள் காட்டுமிராண்டிகளா. பின்னர் எதற்காக 7000 மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். குற்றச்சம்வங்களுக்கு காரணம் மதுதான், மதுக்கடைகளை மூடாமல் திறந்து வைத்துள்ளார்கள்.
தமிழக மீனவர்கள் கைது தொடர்பான கேள்விக்கு: முதல்வரா இல்லை போஸ்ட் மாஸ்டரா. 39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்கள் பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசலாம். வீட்டுக்கு கையெழுத்து வாங்குகிறார்கள் அதை யாரிடம் கொடுப்பார்கள், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வரப்போகிறது எதற்காக இந்த நாடகம். கேரள மீனவர்களை கைது செய்யாத இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை மட்டும் தான் கைது செய்கிறது. எல்லை தாண்டி வரவன் மீனவன் என்பது அவர்களுக்கு பிரச்சனை அல்ல தமிழன் என்பது தான் பிரச்சனை. ஒரு நாள் அந்த இடத்தில் நான் உட்காரும்போது அவன் எப்படி தொடுகிறான் என்று பார்க்கிறேன்.
வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்திற்காக குரல் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு: எல்லா விவகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பாராளுமன்றம் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும், சட்டம் விவாதித்து நிறைவேற்றப்பட்டதா, இதற்கு பெயர் தான்தோன்றித்தனம் என்றார்.
0
0