பட்டியல் இனத்தவர் வார்டுகள் புறக்கணிப்பு… எரியோடு பேரூராட்சி தலைவர் மீது புகார் ; துணைத் தலைவர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan30 September 2023, 4:36 pm
வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சியில் பட்டியல் இனத்தவர் வார்டுகளில் பணிகள் செய்யாமல் புறக்கணிப்பதாக கூறி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர், துணைத் தலைவர் உள்பட 9 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, பட்டியல் இனத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளான மறவபட்டி, மீனாட்சிபுரம், பாண்டியன் நகர் பகுதிகளில், இதுநாள் வரை பொதுநிதியிலிருந்து எவ்விதமான பொதுப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவா, பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர், மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
அதன் பிறகு அவர் பேட்டியளித்ததாவது :- எரியோடு பேரூராட்சியில் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மற்ற வார்டுகளில் பேரூராட்சி நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல், பேரூராட்சி மன்ற தலைவரின் உறவினர்களால் வேலைகள் நடைபெறுகின்றன.
அதுவும் மிகவும் தரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் 15 வார்டுகளில் கூடுதலான வாக்குகளை 4வது வார்டு மீனாட்சிபுரத்தில் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அவரும் இந்த வார்டுகளை புறக்கணிக்கிறார்.
அவர்களை கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனையின் பேரில் தான் நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கிறார்கள். எனவே எரியோடு பேரூராட்சியில் இதுபோல் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தெரிவித்தார்.