தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் காலமானார்.. அதிர்ச்சியில் கட்சியினர்!
Author: Hariharasudhan14 December 2024, 11:06 am
ஈரோடு கிழக்கு எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நலக் குறைவால் காலமானர்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று (டிச.14) காலமானார். உடல்நலப் பிரச்னையால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்: முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலை அடுத்து ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த ஆண்டு காலமானார். இதனையடுத்து, இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், மீண்டும் திடீர் உடல்நல கோளாறு காரணமாக, கடந்த நவம்பர் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது, நிமோனியா காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது..
இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இரண்டு முறை தலைவராக பொறுப்பு வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈவிகே சம்பத் – சுலோச்சனா தம்பதியின் மகனான இவர், பெரியாரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கதது.