’இந்தியும், தமிழும் எங்கள் உயிர்’.. ஈரோடு திமுக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு!

Author: Hariharasudhan
31 January 2025, 9:57 am

இந்தியும் தமிழும் எங்கள் உயிர் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், திமுக சார்பில் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ் இந்தியில் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், “திமுகவின் கொள்கை இருமொழிக் கொள்கைதான். அந்த இரு மொழிகள், ஆங்கிலமும், தமிழும்தான். திமுக எந்த காலக்கட்டத்திலும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். லக்கி கோத்தாரி என்பவர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்.

அவர் பல வருடங்களாக திமுகவில் இணைந்து பயணித்து வருகிறார். அவர் வட இந்தியர்கள் தொழில் உரிமையாளர்களை அழைத்துச் சென்று, நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்துள்ளார். அப்போது தமிழில் நோட்டீஸ் கொடுத்தால் எப்படி படிப்பது என்று சிலர் கேட்டுள்ளனர்.

VC Chandrakumar about Hindi Viral video

எனவே, லக்கி கோத்தாரி, தனிப்பட்ட முறையில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியுள்ளார். இதுபோன்ற வட இந்தியர்கள் வாழும் பகுதிக்கு இந்தி நோட்டீஸ் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அதனால் இதை பெரிதாகப் பேசவில்லை. அவர் எனக்காகவே பரப்புரை செய்துள்ளார். இதில் தவறொன்றும் இல்லை.

இதையும் படிங்க: 4 மாதங்களாக அழுகிக் கிடந்த தந்தை, மகள் சடலம்.. விசாரணையில் சிக்கிய மருத்துவர்!

திமுகவின் இருமொழிக் கொள்கை என்றைக்கும் இருக்கும், இந்தியும், தமிழும்தான் எங்கள் உயிர்” எனக் கூறினார். அப்போது உடனிருந்தவர்கள் அவரின் பிழையைச் சுட்டிக்காட்டிய உடனே, “Sorry, தவறாகச் சொல்லிவிட்டேன்” எனக்கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!