காய்கறி மூட்டையில் புகையிலை பொருட்கள்… கர்நாடகாவில் இருந்து வந்த இரு மினி வேன்களில் கடத்தல்.. ஓட்டுநர்கள் கைது!!
Author: Babu Lakshmanan28 January 2022, 11:05 am
ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் இரண்டு மினி வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பிடிபட்டது.
குட்கா பான் பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இதுவரை பல கோடி மதிப்பிலான புகைநிலை பொருட்களை கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக கர்நாடக மாநில எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த மினி வேனில் தடைசெய்ய பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.