அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலுவை நீக்க வேண்டும் : விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 11:41 am

அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலுவை நீக்க வேண்டும் : விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!

விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. தீட்சிதர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்களின் தலைவர்கள் ஈசன் முருகசாமி, பி.அய்யாக்கண்ணு, சுந்தர விமல்நாதன், கடலூர் ரவீந்திரன், நாமக்கல் பாலு, மிசா மாரிமுத்து, குண்டம் வி.எம்.ராசு, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: செய்யாறு மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெறப்பட்டதை ஏற்கிறோம்.

அதே நேரத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுப் பிரச்சாரங்கள் தவறானவை. அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டதை, ஒட்டுமொத்த விவசாய சங்கத் தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எனவே, அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

வழக்கை திரும்பப் பெற அமைச்சர் எ.வ.வேலு மூலம், எம்எல்ஏ முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரிடம் பெறப்பட்டுள்ள உறுதிமொழிக் கடிதம், விவசாயிகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் உள்நோக்கம் கொண்டவை.
அதனடிப்படையில் வழக்கை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்திருப்பது விவசாயிகளின் ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயலாகும். இதைக் கண்டிக்கிறோம்.

அதேபோல, தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயிகளை வஞ்சிக்கும் உள்நோக்குடன் செயல்பட்ட அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டமும், 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!