தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!
Author: Hariharasudhan24 February 2025, 6:53 pm
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 21 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்போர் ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.
இதன்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர், மீண்டும் மேல்முறையீடு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அதிக வருமானம் போன்ற தகுதியில்லாத நபர்கள், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தகுதியுள்ள பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இதுவரை எனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி வந்தனர். இதனிடையே, எனது கணவர் இறந்துவிட்டார்.
இதையும் படிங்க: சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!
ஆனால், தற்போது திடீரென மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டனர். ஆனால், காரணம் தெரியவில்லை. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். அதேநேரம், சென்னையில் இருந்தே சிலருக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள கோட்டாட்சியர், மேல்முறையீடு செய்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்போம் என்றும் கூறியுள்ளார்.