பெட்டி உடைக்கட்டும்… பாஜகவுக்கு அப்போ இருக்கு… தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை இருப்பாரா..? செல்லூர் ராஜு விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 3:07 pm

ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசுவது தேர்தல் ஸ்டண்ட் எனவும், பாஜகவால் தான் கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்தோம், இப்போது அதிமுகவுக்கு ரூட் கிளியர் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்ச்சடையில் ரேஷன் கடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பி.எம். ஶ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடவுள்ளது குறித்த கேள்விக்கு, “திமுகவுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டது திமுக தான். நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. திமுக காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. மத்திய அரசை எதிர்ப்பது போல் எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை,” என்றார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான். மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார்.

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா என்பது தெரியும்.

கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது, ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மன வேதனை. பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. தேர்தலில் மக்கள் நன்றாக பதில் கொடுப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும் எங்களுக்கு கவலை இல்லை.

கடந்த முறை தேர்தலில் மசூதி பக்கம் செல்லவே முடியவில்லை. பாஜகவை விட்டு வாருங்கள், நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பாஜகவை ஆதரித்ததால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை, இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம். நாங்க என்ன இழி பிறவியா?” என்றார்.

விஜயின் வருகையால் திமுக – அதிமுக கூட்டணி வைக்கலாம் என தவெக நிர்வாகியின் கருத்து குறித்த கேள்விக்கு, “விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள். 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்கு தான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால், விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போ ரூட் கிளியர் பா” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசுவதுதேர்தல் ஸ்டண்ட். இது சாஃப்ட் கார்னர் எல்லாம் இல்லை. அவர் வேற மாதிரி செய்கிறார். இப்படியெல்லாம் பேசினால் அதிமுக ஓட்டுக்கள் மாறும் என நினைக்கிறார்” என கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!