வெள்ளத்தில் தவிக்கும் மக்களிடம் வியாக்கியானம் பேசுவதா..? திமுக அரசு தண்டிக்கப்பட வேண்டும் ; அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!!

Author: Babu Lakshmanan
11 December 2023, 8:03 pm

யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது கூறியதாவது :-கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்பார்கள். அதுபோல ஜனநாயகம் என்ற முகமூடியையும் மக்கள் பிரதிநிதிகள் என்ற முகமூடியையும் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் நடக்கிறார்கள். அரசு அடிமையாக இருந்த போதும், இப்படி நடக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக மூன்றாவது முறையாக இருந்தவர் வீட்டில் ஐடி ரைடு நடைபெற்று வருகிறது. அவர் இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கி உள்ளது காங்கிரஸ் கட்சி. ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிரம்மாண்ட அளவில் மது கடைகள் இருந்திருக்கின்றன.

வருமானவரித்துறை ஒரு வாரமாக சோதனை நடத்தி சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 351 கோடி ரூபாய் வந்துள்ளது. 176 பேக்குகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 140 பேக்குகளில் இன்னும் எண்ணியதிலேயே இவ்வளவு தொகை கண்டறியப்பட்டுள்ளது. இதுபோக தங்கம், வெள்ளி என கணக்கில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு முந்தைய ஆட்சிகள் எப்படி செயல்பட்டார்கள். காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். சமீபத்தில் 8000 கோடி ரூபாய்க்கான குற்றச்சாட்டுகள் உள்ளன.

ED,IT வேண்டாம் என்கிறார்கள். இந்த நாட்டை கொள்ளையடிப்பதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஒரு வாரமாக மிஷின் வைத்து பணத்தை எண்ணியும் முடியாத நிலை உள்ளது. உலக நாடுகள் நம்மைப் பார்த்து சிரிக்கக் கூடிய அளவில் காங்கிரஸ் இந்தியாவை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்து விடுவார்கள். ஏன் விற்று கூட விடுவார்கள்..? நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

பெண்களுக்காக, இளைஞர் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி இந்த ஆட்சியை அர்ப்பணித்துள்ளார். கேவலமான நிலையில் இருக்கும் காங்கிரசை தண்டிக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்த காங்கிரசின் பார்ட்னர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதுவரை எந்த கூட்டணியிலும் புள்ளி வைத்திருக்கிறார்களா? ஆனால் அவர்கள் இந்தியா கூட்டணியில் ஒரு எழுத்துக்கும் இடையே புள்ளி வைத்துள்ளார்கள். அது எல்லாமே கொரோனா புள்ளிகள் தான்.

மிக மோசமான அவலமான நிலைக்கு தமிழகத்தின் தலைநகரமான சென்னை தள்ளப்பட்டு இருக்கிறது. 4000 கோடி செலவு செய்துவிட்டோம் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்றார்கள். இப்போது பாதி தான் செலவு பண்ணினோம் என்கிறார்கள். பாதி பணம் என்ன ஆனது என மக்கள் கேட்கிறார்கள். எவ்வளவு மோசமான நிலையில் நாம் இருக்கிறோம், குழந்தைகளுக்கு பால் இல்லை அமைச்சரிடம் கேட்டால் வியாக்கியானம் பேசுகிறார். இதற்காகவா அவரை அமைச்சராக்கி வைத்துள்ளோம்.

நேற்று கர்ப்பிணிப் பெண்ணின் இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்துக் கொண்டு போய் இருக்கிறார்கள். அந்த உயிருக்கு என்ன பதில். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஆம்புலன்ஸ் இல்லை, காரில்லை. மீன் வண்டியில் அங்கு கொண்டு போன பிறகும், அட்மிட் பண்ணவில்லை. அந்த குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை மருந்து பொருட்கள் வந்த அட்டைப்பெட்டியில் வைத்து அனுப்பி இருக்கிறார்கள். ஒரு துணியில் வைத்து கொடுத்திருக்கலாமே யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அகந்தியில் இந்த அரசு உள்ளது. இந்த அரசு தண்டிக்கப்பட வேண்டும்.

இவர்கள் ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர்கள். ஏன் இந்த கேவலமான நிலை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. பிற மாநிலம் பிற நாட்டவரும் தொழில் தொடங்க முடியாத அளவுக்கு சென்னை நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை நாம் ஆட்சிக்கு வரப் போவது இல்லை என தெரிந்து கொண்டு, 4000 கோடி ரூபாயை பணத்தை ஸ்வாஹா செய்துவிட்டார்கள். கடவுள் அதை காட்டிக் கொடுத்து விட்டார். எல்லோரும் வெள்ளத்தில் இருக்கிறார்கள், வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு நிவாரணம் ஆராயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்கிறீர்கள். அதை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கும் பொழுது அழுத்தம் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை நான் உறுதியாக சொல்லுவேன். ஆனால் இன்றைய தமிழக அரசின் நிலை சூழலை பார்க்கும்போது, எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. மழை கணக்கு சொல்ல அரசு அமைக்கப்படவில்லை. வானமே பிளந்து பத்து கங்கை கொட்டினாலும் மக்கள் வாழ வழி செய்ய வேண்டும். அப்படித்தான் பாதுகாப்பான மாநிலத்தை எங்கள் அரசால் உருவாக்க முடியும், என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 1087

    0

    0