ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு.. திண்டுக்கல் லியோனி கைது செய்ய வேண்டும்.. மதுரை காவல் ஆணையரிடம் அதிமுக புகார்..!!
Author: Babu Lakshmanan29 August 2023, 1:12 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் லியோனியை கைது செய்யக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் புகார் அளித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கடந்த 21ம் தேதி தனியார் தொலைக்காட்சியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண்டித்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர் காவல் துறை ஆணையரிடம் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;- கடந்த 21ம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி அம்மாவின் புகழுக்கு விளைவிக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார். திமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண்களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு, தமிழகத்தின் நவீன சிற்பியாக இருந்த ஜெயலலிதாவை விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை வகுக்ககூடிய ஒருவரே ஆணாதிக்கதுடன் பெண்களை தரைகுறைவாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் புகார் மனுகொடுக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக பாடநூல் தலைவர் பதவியில் இருந்து அவரை உடனே நீக்க வேண்டும். திருவள்ளூரைச் சேர்ந்த திமுக பெண்மணி, திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் நிம்மதியாக இல்லை என் பேசியது வலைதளங்களில் வந்துள்ளது.
இந்த ஆட்சியில் பெண் போலீஸ் கூட பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளிடம் திமுகவினர் மாமுல் கேட்கின்றனர். வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் துடைப்பம் வைத்து சுத்தம் செய்வோம். அதுபோல, தொடர்ந்து இது போன்ற இழிவாக குப்பை போல் பேசினால் துடைப்பத்தால் அவருக்கு கழகத்தினர் வரவேற்பு அளிப்பார்கள்.
கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. திமுக எந்த நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
பெண்களுக்கு எதிராக வார்த்தைகள் இருந்தால் போலீஸ் தானாகவே நடவடிக்கை எடுக்கலாம் என சட்டம் உள்ளது என அதையும் தெரிவித்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த பற்று வைத்துள்ளார். தற்பொழுது மெட்ரோ ரயில் அம்மா பெயரை இருட்டடிப்பு செய்ததை கண்டித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிடுவார், என கூறினார்.