உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை : லாரி ஓட்டுநராக பணிபுரிந்த முன்னாள் மாநகராட்சி ஊழியர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2022, 5:07 pm
கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய முன்னாள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர், நீலிகோணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, கடந்த சில தினங்களாக திடீரென வந்த நபர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, வீதி மீறல் உள்ளதாக அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றுள்ளார்.
மேலும், ஒவ்வொரு கடையிலும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்துக் கடை உரிமையாளர்கள் கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் யாரும் அபராதம் விதிக்கவில்லை என கூறிய, அவர் மறுமுறை வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், மீண்டும் சவுரிபாளையம் தனியார் வணிக நிறுவனத்திற்கு வந்த சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளார்.
இதையடுத்து கடை உரிமையாளர் சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரி அங்கு சென்று சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சிவக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் மாநகராட்சியில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.
கொரோனா காலத்தில் அபராதம் விதிக்க மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ரசீதை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐடி கார்டு, ரசீது புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், சிவக்குமார் மீது 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.